கூடுதலாக 2 பெட்டிகள் இணைத்தும் அலைமோதிய பயணிகள் கூட்டம்


கூடுதலாக 2 பெட்டிகள் இணைத்தும் அலைமோதிய பயணிகள் கூட்டம்
x
திருப்பூர்

உடுமலை,

பாலக்காட்டில் இருந்து உடுமலை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரெயிலில், வைகாசி விசாகத்திருவிழாவையொட்டி கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில்

உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் தென் மாவட்டங்களைச்சேர்ந்த பொதுமக்கள் அதிகமாக உள்ளனர். அதனால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு பெரும்பாலும் திருச்செந்தூர் செல்லும் ரெயிலை பயன்படுத்துகின்றனர். அத்துடன் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு செல்லும் பக்தர்களும் இந்த ரெயிலில் அதிகம் சென்று வருகின்றனர். அதனால் இந்த ரெயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் இருக்கும். அதுவும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். இப்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் இந்த ரெயிலில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது.

வைகாசி விசாகத்திருவிழா

இந்த நிலையில் வருகிற 12-ந்தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா நடக்கிறது. இதையொட்டி தற்போது பல்வேறு இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் அதிகம் சென்று வருகின்றனர். இந்த நிலையில் வைகாசி விசாகத்திருவிழாவையொட்டி பாலக்காடு-திருச்செந்தூர் ரெயிலில் கூடுதலாக பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள், கோரிக்கை விடுத்துவந்தனர்.

இதைத்தொடர்ந்து திருச்செந்தூரில் இருந்து மதுரை, உடுமலை வழியாக பாலக்காடு செல்லும் ரெயிலில் 7-ந்தேதி முதல் வருகிற 12-ம்தேதி வரையும், பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, மதுரை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் 8-ம்தேதி முதல் 13-ந்தேதி வரையிலும் கூடுதல் பெட்டி இணைக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்திருந்தது.

அலைமோதிய பயணிகள் கூட்டம்

அதன்படி நேற்று காலை கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. வழக்கமாக 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரெயிலில் நேற்று 14 பெட்டிகள் இருந்தது. இந்த ரெயிலில் செல்வதற்கு உடுமலை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இந்த ரெயில் உடுமலைக்கு வந்தபோதே, பொள்ளாச்சியில் இருந்து வந்த பயணிகள் சிலர் ரெயிலில் உட்காருவதற்கு இருக்கை கிடைக்காமல் நின்றுகொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்த ரெயிலில், உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பயணிகள் ஏறினர். அதனால் ரெயிலில் சில பெட்டிகளில் உள்ள இருக்கைகளுக்கு நடுவிலும், நடைபாதையிலும் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்தனர். சிலர் பழனி உள்ளிட்ட இடங்களில் இறங்கினால் உட்கார இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றனர். அப்படியிருந்தாலும் அந்த ஊர்களில் இருந்தும் பயணிகள், ரெயில்களில் ஏறுவார்கள். இந்த ரெயிலில், வைகாசி விசாகத்திருவிழாவையொட்டி கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.


Next Story