உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு ரூ.54லட்சம் செலவில் புதிய தேர்
உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டத்திற்கு ரூ.54 லட்சம் செலவில் புதிய தேர் செய்யும் பணிகள் நிறைவடைந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. விரைவில் புதிய தேர் வெள்ளோட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாரியம்மன் கோவில்
உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் அமாவாசை தினத்தை அடுத்து வரும் செவ்வாய்கிழமை தேர்த்திருவிழா, நோன்பு சாட்டப்பட்டு 15-வது நாளில் தேரோட்டம் நடைபெறும்.இந்த தேர் கோவிலின் தேர்நிலையில் இருந்து புறப்பட்டு பழனிசாலை, தளிசாலை, வடக்குகுட்டைவீதி, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடைவீதி, கொல்லம்பட்டறை, பொள்ளாச்சி சாலை வழியாக நிலையை வந்தடையும். தேரை பக்தர்கள் முன்னாலிருந்து இழுத்து செல்ல, தேரை பின்னாலிருந்து யானை தள்ளி செல்லும். சதுர வடிவிலான இந்த தேர் மரத்தினால் ஆனது. சக்கரங்கள் மட்டும் இரும்பால் ஆனது.
புதிய தேர் பணிகள் நிறைவு
இந்த கோவிலில் இருந்த மிகவும ்பழமை வாய்ந்த தேருக்கு பதிலாக புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. 5 நிலைகளை (அடுக்கு) கொண்ட இந்த புதிய தேரின் மொத்த உயரம் 12½ அடி. இதில் தேர்பலகை மட்டும் 9¾ அடியாகும். அதற்கு மேல் உற்சவர் உட்காரும் சிம்மாசனம் 2¾ அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேருக்கு 780 கன அடி இலுப்ப மரமும், 20 கனஅடி தேக்கு மரமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேரின் வெளிப்புறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன், அம்மன் தளங்கள் குறித்த வரலாற்று சிற்பங்கள் மற்றும் சிவன், மகாவிஷ்ணு, விநாயகர், முருகர் சிற்பங்கள் என மொத்தம் 220 சிற்பங்கள் இடம்பெற்றுள்ளது. இதுதவிர 120 போதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளது.
உடுமலை மாரியம்மன் கோவில் சார்பில் ரூ.53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் இந்த புதிய தேர், எண்கோண வடிவில் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தேருக்கு, அச்சு சக்கரங்கள் மட்டும் பழைய தேரில் இருந்த சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய தேர் செய்யும் பணிகளில், தேரோட்டத்தின் போது சுவாமியுடன் அம்பாள் அமரும் இடமான பத்மாசனம் வரை 100சதவீத பணிகள் நிறைவடைந்ததைத்தொடர்ந்து இறுதியாக நேற்று முன்தினம் தேரின் மையப் பகுதியில் நெஞ்சாணி பொருத்தும் பணிகள் நடந்தது.
சிறப்பு பூஜை
இதைத்தொடர்ந்து புதிய தேருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.சிறப்பு பூஜையில் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுவலர் தீபா மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைத்ததும், புதிய தேர் வெள்ளோட்டத்தை நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு (2023) முதல் தேர்த்திருவிழா தேரோட்டத்தில் இந்த புதிய தேர் இடம்பெறும்.