உடுமலையில் இருந்து கேரளாவிற்கு செல்லும் காய்கறிகள் அதிகரிப்பு


உடுமலையில் இருந்து கேரளாவிற்கு   செல்லும் காய்கறிகள் அதிகரிப்பு
x
திருப்பூர்


ஓணம் பண்டிகையையொட்டி உடுமலை நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள கமிஷன் மண்டிகளில் நேற்று காய்கறிகள் ஏலம் விறுவிறுப்பாக நடந்தது.

கமிஷன் மண்டிகள்

உடுமலை ராஜேந்திரா சாலையில் நகராட்சி வாரச்சந்தைஉள்ளது.

ஒவ்வொரு திங்கள் கிழமையும் கூடும் இந்த வாரச்சந்தையின் ஒரு பகுதியில் தினசரி காய்கறி சந்தையும், அதையடுத்து காய்கறி கமிஷன் மண்டிகளும் உள்ளன. உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை வாகனங்கள் மூலம் இந்த காய்கறி கமிஷன் மண்டிகளுக்கு தினசரி கொண்டு வருகின்றனர். உடுமலையில் இருந்து பாலக்காடு, திருச்சூர், மறையூர், மூணாறு உள்ளிட்ட கேரள பகுதிகளுக்கும் தினசரி அதிக அளவில் காய்கறிகள் செல்கின்றன.

ஓணம் பண்டிகை

இந்த நிலையில் கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம்பண்டிகையொட்டி உடுமலையில் காய்கறிகள் விற்பனை அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக தட்டை பயறு அதிக அளவு விற்பனை ஆகும். அதனால் இந்த பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் தட்டைபயிறு பயிரிட்டுள்ளனர். அத்துடன் கேரளாவிலும் தற்போது ஆங்காங்கு தட்டைபயிறு பயிரிடப்பட்டுள்ளது.

அதனால் உடுமலைக்கு விவசாயிகள் அதிக அளவில் தட்டைபயிரை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தும், எதிர்பார்த்த அளவு விலை கிடைக்காமல் போனது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிலோரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்பட்ட தட்டைப்பயிறு நேற்று கிலோரூ.60-க்கு விற்பனையானது. வரத்து அதிகரித்திருந்ததாலும், கேரளாவில் ஆங்காங்கு தட்டைப்பயிறு பயிரிடப்பட்டிருப்பதாலும் ஓணம் பண்டிகைக்கு தட்டைப்பயறுக்கான விலை எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காமல் போனதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தக்காளி

உடுமலையில் இருந்து கேரளாவிற்கு தக்காளியும் அதிக அளவு செல்கிறது. உடுமலையில் உள்ள கமிஷன் மண்டிகளில் நேற்று முன்தினம் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை ஆனது. நாளை மறுநாள் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் உடுமலை மற்றும் அருகில் உள்ள கமிஷன் மண்டிகளுக்கு நேற்று 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தக்காளி பெட்டிகள் வந்திருந்தன.

அவை ஒரு பெட்டி ரூ.600 வரை ஏலத்தில் போனது. உடுமலையில் நேற்று ஒரு கிலோ வாழைக்காய் ரூ.35-க்கும், முருங்கைக்காய் ரூ.80 முதல் ரூ.90 வரைக்கும், பச்சை மிளகாய் ரூ.50-க்கும், 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் நேற்று ரூ.50 முதல் ரூ.60 வரைக்கும் விற்பனை ஆனது. ஓணம் பண்டிகையையொட்டி நேற்று உடுமலையில் உள்ள கமிஷன் மண்டிகளில் காய்கறிகள் ஏலம் விறுவிறுப்பாக நடந்தது. ஏலத்தில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு காய்கறிகளை வாங்கி சென்றனர்.


Next Story