பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
உடுமலையில் பெய்த பலத்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.மத்திய பஸ்நிலையம் குண்டும் குழியுமாக ஆனதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற தண்ணீரில் வேன் சிக்கியது.
குண்டும், குழியுமானபஸ்நிலையம்
உடுமலையில் நேற்று முன்தினம் பகலில் மழை விட்டு விட்டு பெய்தது. இரவு பலத்த மழை பெய்யத்தொடங்கியது.விடிய விடிய பலத்த மழை பெய்தது. நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 63 மி.மீ.மழை பதிவாகியிருந்தது. உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.
இந்த நிலையில் பலத்த மழையினால் அந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.பஸ்கள், பஸ்நிலையத்திற்குள் வரும்போது அந்த குழிகளுக்குள் இறங்கி ஏறுகின்றன. அப்போது மழைத்தண்ணீர், நடந்து செல்லும் பயணிகள் மீது தெளிக்கிறது. அதனால் பஸ்சுக்காக நடந்து செல்லும் பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இதற்கிடையில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் வேறுபஸ்களில் இருந்து இறங்கி அடுத்த பஸ்களுக்கு செல்லும் பயணிகள் ஆகியோர் பஸ் வந்ததும் இடம் பிடிப்பதற்காக அவசர, அவசரமாக ஓடுகின்றனர். அப்போது குண்டும், குழியுமாக உள்ள பகுதியில் கால்தடுக்கி கீழே விழுகின்றனர்.
இது மழை நேரத்தில் அதிகமாக நடக்கிறது. அதனால் பஸ் நிலையத்திற்குள் குண்டும் குழியுமாக உள்ள தளத்தில் மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள், பஸ் ஓட்டுனர்கள் ஆகியோர் எதிர்பார்க்கின்றனர்.
தேங்கி நிற்கும்மழைத்தண்ணீர்
பலத்த மழையினால் மழைநீர் வடிகால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட சில சாலைகளிலும் தண்ணீர் ஓடுகிறது. பொள்ளாச்சி சாலையில் தீயணைப்பு நிலையம் அருகில், கபூர்கான் வீதியில் உழவர் சந்தைக்கு அருகில், தாராபுரம் சாலை, வெஞ்சமடை அருகே பழனி சாலை உள்ளிட்ட இடங்களிலும், ஆங்காங்கு பள்ளமான இடங்களிலும் மழைத்தண்ணீர் தேங்கி நிற்கிறது.
நேற்று காலை லேசான மழை பெய்தது. 11 மணிக்கு பிறகு தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.குளிர்காற்றும் வீசுகிறது. அதனால்பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சுரங்கப்பாதைகளில் தண்ணீர்
உடுமலை தளி சாலையில் காந்தி சதுக்கம் பகுதியில் ரெயில்வே மேம்பாலத்திற்கு மேற்கு புறம் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் தளம் ஏற்கனவே குண்டும் குழியுமாக உள்ளது.பெரிய அளவிலான குழிகளும் உள்ளன.இந்த குழிகளில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இந்த சுரங்கப்பாதை வழியாக கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் பலத்த மழையினால் இந்த சுரங்கப்பாதையில் மழைத்தண்ணீர் தேங்கி நிற்கிறது.அதனால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள்சிரமத்திற்குள்ளாகினர்.
தண்ணீரில் சிக்கிய வேன்
அதுபோன்று நேற்று காலை அந்த வழியாக பழனிசாலையை நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு வேன், அந்த சுரங்கப்பாதையில் வந்தபோது என்ஜின் பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் வேன் என்ஜின் ஆப் ஆகி நின்றது. இதைத்தொடர்ந்து அந்த வேன் வேறு வாகனம் மூலம் கயிறுகட்டி இழுத்து மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள், வாகன ஓட்டுனர்கள்ஆகியோர் எதிர்பார்க்கின்றனர்.