உடுமலை மாரியம்மன் கோவில் புதியதேர் வெள்ளோட்டம்
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
புதிய தேர்
உடுமலையில் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்த பழமையான தேருக்குப்பதிலாக புதிய தேர் வடிவமைக்கப்பட்டு தேரோட்டத்துக்கு தயார் நிலையில் உள்ளது. எண்கோண வடிவில் மர சிற்ப வேலைப்பாடுகளுடன் 5 நிலைகளைக்கொண்டதாக ரூ.53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் இந்த தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தேரின் மொத்த உயரம் 12 அடியாக உள்ள நிலையில், தேர்ப்பலகை 9 அடி உயரத்திலும், உற்சவருக்கான சிம்மாசனம் 2 அடி உயரத்திலும் அமைந்துள்ளது. இந்த தேரை உருவாக்குவதற்காக இலுப்ப மரம் மற்றும் தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேரில் அம்மன் தலங்கள் குறித்த வரலாற்று சிற்பங்கள், சிவன், விஷ்ணு, முருகன், விநாயகர் உள்ளிட்ட 220 மரச்சிற்பங்களும், 120 பொதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.
வெள்ளோட்டம்
பல்வேறு சிற்ப வேலைப்பாடுகளுடன் கண்ணைக்கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தேர் நிலைக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி நடைபெற்றது. இந்த நிலையில் வருகிற 23-ந்தேதி புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. அன்று காலை 9.45 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.
காலை 10.30 மணிக்கு தேவதா ஹோமத்தைத்தொடர்ந்து புதிய தேர் பிரதிஷ்டா ஹோமங்கள் நடக்கிறது. பகல் 1 மணிக்கு புதிய தேர் கும்ப ப்ரோக்க்ஷனம், ஸ்தாபனம், பலிதானம், மஹா தீபாராதனை நடைபெறும். மாலை 4 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஏப்ரல் மாதம் தேரோட்டம்
இந்த நிகழ்வில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வெள்ளோட்டத்தை தொடங்கி வைக்க உள்ளனர்.
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வருகிற மார்ச் மாதம் 28-ந்தேதி நோம்பு சாட்டுதலுடன் தொடங்கி, முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ந்தேதி நடைபெற உள்ளது.