ஆலங்குளம் அருகே சோகம்:பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி யு.கே.ஜி. மாணவி பலி
ஆலங்குளம் அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி யு.கே.ஜி. மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி யு.கே.ஜி. மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள்.
மெக்கானிக்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தெற்கு கரும்பனூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் தனராஜ் (வயது 40). மெக்கானிக். இவருடைய மனைவி லிங்கேசுவரி. இவர்களுக்கு விவேகா (8), சபீனா (6) ஆகிய 2 மகள்கள் உண்டு.
அங்குள்ள பள்ளிக்கூடத்தில் விவேகா 3-ம் வகுப்பும், ஆலங்குளத்தில் உள்ள தனியார் நர்சரி பள்ளிக்கூடத்தில் சபீனா யு.கே.ஜி. வகுப்பும் படித்தனர்.
பள்ளிக்கூட வேனில் வந்தபோது...
சபீனா தினமும் காலையில் பள்ளிக்கூட வேனில் பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டுக்கு திரும்பி வருவது வழக்கம். அதன்படி நேற்று காலையில் வழக்கம்போல் சபீனா பள்ளிக்கூட வேனில் பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் வேனில் வீட்டுக்கு புறப்பட்டு வந்தார்.
அப்போது சபீனாவின் வீட்டின் அருகில் வேனை நிறுத்தாமல், அதற்கு முந்தைய நிறுத்தத்தில் வேனை நிறுத்தி ஒரு குழந்தையை கீழே இறக்கி விட்டதாகவும், அந்த குழந்தையுடன் சேர்த்து சபீனாவையும் கீழே இறக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
சக்கரத்தில் சிக்கி பலி
பின்னர் அங்கிருந்து வேன் புறப்பட்டபோது, எதிர்பாராதவிதமாக சபீனா நிலைதடுமாறி வேனின் பின்சக்கரத்தில் விழுந்தார். இதில் சிறுமி சபீனாவின் தலையில் வேனின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதனைப் பார்த்த அப்பகுதியினர் மற்றும் பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆலங்குளம் போலீசார் விரைந்து சென்று, இறந்த சபீனாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி உரிமையாளரிடம் விசாரணை
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வேன் டிரைவரான ஆலங்குளம் ஜோதி நகரை சேர்ந்த மாடசாமி மகன் ஸ்ரீராம்குமாரை (33) பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீராம்குமார், தனியார் நர்சரி பள்ளியை நடத்தி வந்ததாகவும், அவரே டிரைவராகவும் செயல்பட்டு மாணவ-மாணவிகளை வேனில் அழைத்து சென்று வீடுகளில் விட்டு வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஆலங்குளம் அருகே பள்ளிக்கூட வேன் சக்கரத்தில் சிக்கி யு.கே.ஜி. மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.