உக்தவேதீஸ்வரர் கோவில் தீர்த்தவாரி
சித்திரை பெருவிழாவையொட்டி உக்தவேதீஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குத்தாலம்:
சித்திரை பெருவிழாவையொட்டி உக்தவேதீஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உக்தவேதீஸ்வரர் சாமி கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருத்துருத்தி எனப்படும் குத்தாலம் அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய உக்தவேதீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. சமயக் குரவர்கள் மூவரால் பாடல் பெற்றதும் சுந்தரர் தோல் நோய் நீக்கிய தலமாக இந்த தலம் விளங்குகிறது.
இந்த கோவிலின் சித்திரை பெருவிழா கடந்த 24-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான 5-ம் நாள் சகோபுர திருவிழா கடந்த 29-ந் தேதி நடந்தது. 7-ம் நாள் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி 1-ந் தேதி நடந்தது. அதனைத் தொடர்ந்து தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.
தீர்த்தவாரி
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தீர்த்தவாரி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சுவாமி, அம்பாள் பட்டாடை உடுத்தி அணிகலன்கள் அணிந்து கைலாய வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க காவேரி தீர்த்த படித்துறைக்கு எழுந்தருளினர்.
பின்னர் அஸ்திர தேவருக்கு விசேஷ அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனை நடைபெற்று தீர்த்தவாரி நடந்தது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.