மானியத்தில் இரு சக்கர வாகனம் பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்
உலமாக்கள் மானிய விலையில் இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வக்பு நிறுவனங்களில் பணியாற்றும்...
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியினை சிறப்பாகவும், செம்மையாகவும் செய்வதற்கு ஏதுவாக புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்கிட மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயனாளி வாங்கும் இரு சக்கர வாகனத்தின் கொள்ளளவு 125 சி.சி. சக்திக்கு மிகாமலும் வாகன விதிமுறை சட்டம் 1998-ன் படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் 1.1.2020-க்கு பிறகு தயார் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நபருக்கு இரு சக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது வாகனத்தின் விலையில் ரூ.25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அத்தொகையை மானியமாக வழங்கப்படும். எனவே, இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
5 ஆண்டுகள்
தமிழ்நாட்டில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். தமிழ்நாட்டை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். 18 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகனம் கற்றுணர்வுக்கான (எல்.எல்.ஆர்.) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
அரியலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 11 வக்பு நிறுவனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பிக்கும் பட்சத்தில் பேஷ் இமாம், அரபி ஆசிரியர், மோதினார், முஜாவர் என்ற முன்னுரிமையின் அடிப்படையில் ஒருவருக்கு மட்டுமே மானிய தொகை வழங்கப்படும். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமான சான்று, வயது சான்றிதழ், புகைப்படம், சாதி சான்று, மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, ஓட்டுனர் உரிமம் அல்லது எல்.எல்.ஆர்., வங்கி கணக்கு எண், மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீட்டுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
நல அலுவலகம்
மேலும் வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல், விலைப்புள்ளி ஆகியவை இணைக்கப்பட வேண்டும். மேலும், மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்க தேவையான விவரங்கள் மற்றும் விண்ணப்பத்தினை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரியலூர் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.