உளுந்தூர்பேட்டை இளம் பெண் தற்கொலை
உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இளம் பெண் கேரளாவில் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அமலநாதன் மகன் அழகுவேல் (வயது 31). இவர், கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார்.
இ வருக்கும், உளுந்தூர்பேட்டை அடுத்த, கெடிலம் செஞ்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மகள் தமிழ்ச்செல்வி (28) என்பவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தற்கொலை
தம்பதியிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவருடன் காசர்கோடு பகுதிக்குசென்று, தமிழ்செல்வி வசித்து வந்தார். அங்கு கடந்த 15-ந்தேதி தமிழ்செல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை தமிழகத்திற்கு அனுப்பி வைத்த நிலையில், அவரது உடல் இன்று பண்ருட்டி அருகே பனப்பாக்கம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
உறவினர்கள் சாலை மறியல்
இந்த நிலையில் உயிரிழந்த தமிழ்செல்வியின் உறவினர்கள், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புதுப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் புதுப்பேட்டை நந்தகுமார், நெல்லிக்குப்பம் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் புஷ்பராஜ், கனகராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.