ஈழத்தமிழர் இனப்படுகொலை விவகாரத்தில் ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
ஈழத்தமிழர் இனப்படுகொலை விவகாரத்தில் ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூயிருப்பதாவது:-
இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை. இனியும் தாமதிக்காமல் அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் இந்தியாவின் நிலை வரவேற்கத்தக்கது. ஆனால், போதுமானதல்ல. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை, அதன் அடிப்படை தேவைகளுக்கு கூட இந்தியாவை தான் நம்பியிருக்கிறது.
இத்தகைய சூழலில், 13-வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் அம்சங்களை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கவேண்டும். அவற்றில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் தான் உதவிகளை வழங்கமுடியும் என்று நிபந்தனை விதிப்பதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தர இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும். ஐ.நா. மனித உரிமை பேரவையில் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கவேண்டும் என வலியுறுத்திய இந்தியா, அங்கு நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை தண்டிப்பது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது.
இலங்கை இனப்படுகொலைகள் நிகழ்ந்து 13 ஆண்டுகள் ஆகியும், அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாததை ஏற்கமுடியாது. இலங்கை போர்க்குற்ற விசாரணையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த புதிய தீர்மானம் வரும் 23-ந்தேதி ஐ.நா. மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அக்டோபர் 6-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்கும் வகையில், புதிய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.