வரிபாக்கி செலுத்தாதவர்கள் வீடுகளில் முன்னறிவிப்பின்றி குடிநீர் இணைப்பு துண்டிப்பு
வரிபாக்கி செலுத்தாதவர்கள் வீடுகளில் முன்னறிவிப்பின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வரிபாக்கி செலுத்தாதவர்கள் வீடுகளில் முன்னறிவிப்பின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நகரசபை கூட்டம்
மயிலாடுதுறை நகரசபை கூட்டம் அதன் அவை கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் சனல்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-
குடிநீரில் கழிவுநீர் கலப்பு
ஜெயலட்சுமி (தி.மு.க.) : எனது வார்டில் பாதாளசாக்கடை உள்நுழைவுத் தொட்டி நிரம்பியதால் வீடுகளில் கழிவுநீர் எதிர்க்கிறது. பாதாளசாக்கடை குழாய்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
ரஜினி (தி.மு.க.) : வடுகத்தெரு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்துவருகிறது, 4 மாதங்களாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரிபாக்கி
உஷாராணி (தி.மு.க.) : குடியிருப்பு வீடுகளுக்கு வரிபாக்கி இருப்பவர்களிடம் எந்த முன்னறிவிப்புமின்றி குடிநீர், பாதாளசாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இது குறித்து கவுன்சிலர்களுக்குகூட தெரிவிக்கவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: வீடுகளிலும் குடிநீர் இணைப்பை துண்டிக்க யாருக்கும் உரிமை இல்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து பாதிப்பு
காந்தி (பா.ம.க) : நகராட்சி வீட்டு வரி ரசீது முகவரிகள் பலருக்கு மாற்றம் செய்யப்பட்டு குளறுபடியாக உள்ளது.
ரிஷிகுமார் (தி.மு.க.) : திருவிழந்தூர் தெற்குவீதியில் இருந்து தீப்பாய்ந்தாள்அம்மன் கோவிலுக்கு செல்லும் இணைப்புசாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மோட்டாரை சீரமைக்க வேண்டும்
கணேசன் (ம.தி.மு.க.) : திருவிழந்தூர் பெருமாள் கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதனருகே உள்ள மோட்டார் பழுதடைந்து தண்ணீர் வசதி இன்றி உள்ளது அதனை சீரமைக்க வேண்டும்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் மினி குடிநீர் தொட்டிகளின் மோட்டார்களை பழுது நீக்கம் செய்து தரச் சொல்லி வலியுறுத்தி பேசினார்.
முடிவில் நகரசபை துணைத் தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.