தூத்துக்குடி மாநகராட்சியில்அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் எச்சரிக்கை
தூத்துக்குடி மாநகராட்சியில்அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் அனுமதியின்றி கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குடிநீர் இணைப்பு
தூத்துக்குடி மாநகர பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம் அமைந்துள்ள தாமிரபரணி ஆற்று படுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது வரை போதிய மழை பெய்யாத நிலையிலும் தூத்துக்குடி மாநகர வாழ் மக்களுக்கு சுழற்சி முறையில் பாதுகாப்பான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் குடிநீர் விநியோகத்தின் போது எதிர்பாராமல் அழுத்தத்தின் காரணமாக ஏற்படக்கூடிய நீர்க்கசிவு மற்றும் குடிநீர் குழாய் உடைப்பு ஆகியவற்றை உடனுக்குடன் சரி செய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக, குடிநீர் இணைப்பு கோரி வரப்பெறும் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு ஏழு நாட்களுக்குள் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தினசரி 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
இந்த நிலையில், மாநகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் மாநகராட்சி குடிநீர் குழாயில் இருந்து முறைகேடாக நீர் உறிஞ்சுதல் மற்றும் குடிநீர் குழாயை சேதப்படுத்தி அனுமதி இன்றி குடிநீர் குழாய் பழுது பார்த்தல் போன்ற மாநகராட்சிக்கான வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையிலான தவறான செயல்பாடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இது போன்ற முறைகேடான செயல்கள் குடிநீர் விநியோகம் தொடர்பான அரசாணை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி குடிநீர் உப விதிகளுக்கு முரணானதாகும். எனவே, மாநகராட்சியின் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுத்தவர்கள், தங்களது குடிநீர் இணைப்பை வரன்முறை படுத்துவதற்கு ஏதுவாக தாமாக முன்வந்து மாநகராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய கட்டணம் மற்றும் அபராத தொகையை செலுத்தலாம். மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் கள ஆய்வின்போது மேற்படி முறைகேடான செயல்கள் கண்டறியப்படும் பட்சத்தில் மேற்படி குடிநீர் இணைப்பானது நிரந்தரமாக துண்டிக்கப்படும்.
இடைத்தரகர்கள்
மேலும், குடிநீர் குழாய் இணைப்புகள் பழுது ஏற்படும் நிலையில் மாநகராட்சியில் உரிய கட்டணங்களை செலுத்தி அனுமதி பெற்று மாநகராட்சி குடிநீர் விநியோக பணியாளர்கள் முன்னிலையில் பணி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. குடிநீர் வினியோகம் தொடர்பான அனைத்து விதமான புகாரையும் மாநகராட்சி அலுவலர்களை நேரடியாக சந்தித்து விவரம் தெரிவித்து தீர்வு காண வேண்டும். மாநகராட்சிக்கு தொடர்பில்லாத இடைத்தரகர்களை அணுகி மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படும் வகையில் முறைகேடான செயலில் ஈடுபடுவதன் மூலம் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் கடுமையான நடவடிக்கைகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.