ஈரோட்டில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு ஆஸ்பத்திரியை அமைச்சர்கள் ஆய்வு


ஈரோட்டில் கட்டப்பட்டு வரும்  பல்நோக்கு ஆஸ்பத்திரியை அமைச்சர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 29 Sept 2022 1:00 AM IST (Updated: 29 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர்கள் ஆய்வு

ஈரோடு

ஈரோட்டில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு ஆஸ்பத்திரியை அமைச்சர்கள் சு.முத்துசாமி, எ.வ.வேலு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பல்நோக்கு ஆஸ்பத்திரி

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாக பகுதியில் ரூ.64 கோடி மதிப்பில் 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு ஆஸ்பத்திரி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு ரூ.64 கோடி மதிப்பில் 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும்.

பல்வேறு சிறப்பு பிரிவுகள்

இதில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, அறுவை மற்றும் எலும்பு தொடர்பான சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு சிறப்பு பிரிவுகள் செயல்பட உள்ளது. கட்டிடம் தரமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரி முன்பு மேம்பாலம் செல்வதால் சர்வீஸ் ரோடு அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு அங்கு சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என்றால் அரசு ஆஸ்பத்திரியில் 3.30 மீட்டர் அகலம் இடம் தேவைப்படுகிறது. இதில் சுகாதாரம் மற்றும் நெடுஞ்சாலை துறை ஆகிய 2 துறைகள் சம்பந்தப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர்களுடன், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் நாகரத்தினம் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story