'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ்23 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகலெக்டர் தகவல்
‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் 23 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
'நான் முதல்வன்'
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் நாளைய சமுதாயம் வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டும் இல்லாமல் பல்திறன் வளர்க்கும் கல்வியாக மேம்படுத்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, 'நான் முதல்வன்' என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம், பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு, மாணவ, மாணவிகளின் படிப்பு, அறிவு, சிந்தனை, ஆற்றல் திறமை உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது, தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது, அடுத்தடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படிப் படிக்கலாம்? என வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. மேலும், தமிழில் தனித்திறன் பெறவும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்த பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
23 ஆயிரம் பேர்
தேனி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம், 70 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 பயின்ற 3,485 மாணவர்கள், 3,181 மாணவிகள், பிளஸ்-2 பயின்ற 2,970 மாணவர்கள், 2,996 மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதேபோல் 27 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 பயின்ற 2,721 மாணவர்கள், 2,795 மாணவிகள், பிளஸ்-2 பயின்ற 2,475 மாணவர்கள், 2,817 மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 97 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 651 மாணவர்கள், 11 ஆயிரத்து 789 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 440 மாணவ, மாணவியர்கள் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.