'ஒரே நாடு, ஒரே உரம்' திட்டத்தின் கீழ் முதல் முறையாக 'பாரத் யூரியா' உரம் ஈரோடு வந்தது
‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தின் கீழ் முதல் முறையாக ‘பாரத் யூரியா’ உரம் ஈரோடு வந்தது.
'ஒரே நாடு ஒரே உரம்' திட்டத்தின் கீழ் முதல் முறையாக 'பாரத் யூரியா' உரம் ஈரோடு வந்தது.
பாரத் யூரியா
ஈரோடு மாவட்டத்தில் குறுவை பாசனத்திற்காக தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் ஆகிய கால்வாய்களிலும், சம்பா பாசனத்திற்காக கீழ்பவானி மற்றும் மேட்டூர் வலதுகரை ஆகிய கால்வாய்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு நெல் சாகுபடி பணிகள் நடந்து வருகிறது.
மேலும் கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி, நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் 'ஒரே நாடு ஒரே உரம்' திட்டத்தின் கீழ் கர்நாடக மாநிலம் மங்களூரு துறைமுகத்தில் இருந்து 'பாரத் யூரியா' உரம், 1,000 டன் முதல் முறையாக ஈரோட்டுக்கு வந்தது.
கடும் நடவடிக்கை
இதை ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி ஆய்வு செய்து கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய ஏதுவாக தற்போது யூரியா உரம் 3 ஆயிரத்து 17 டன், டி.ஏ.பி. உரம் 1,585 டன், பொட்டாஷ் உரம் 1,499 டன், காம்ப்ளக்ஸ் உரம் 11 ஆயிரத்து 329 டன், சூப்பர் பாஸ்பேட் 851 டன்னும் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. உரங்களின் அதிகபட்ச விற்பனை விலை மற்றும் இருப்பு விவரங்களை விலை பலகையில் தெளிவாக எழுதி கடையின் முன்பு விவசாயிகள் அறியும்படி வைக்க வேண்டும். விற்பனை ரசீதில் விவசாயிகள் கையொப்பம் பெற்று உரம் வழங்க வேண்டும். அனைத்து உரங்களையும் விற்பனை முனைய கருவி மூலமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பு வைக்க வேண்டும். உரங்களுடன் பிற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.