பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
x

வேலூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

வேலூர்

வேலூர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

ஆய்வுக்கூட்டம்

வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கலெக்டர் குமாரவேல்பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமிஷனர் ரத்தினசாமி வரவேற்றார்.

கூட்டத்துக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் வேலூரில் கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார்.

அந்த ஆய்வுக்கு பின்னர் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகள் குறித்து எனது தலைமையில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி பணிகளின் முன்னேற்றம் குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். அதன்அடிப்படையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளை சீரமைத்தல், தேவையான இடங்களில் புதிய சாலைகளை அமைத்தல் போன்ற பணிகளை துரிதப்படுத்த வேண்டும். சாலைகளில் திடக்கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் தேங்காமல் அன்றாடம் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

பாதாள சாக்கடை பணிகள்

மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் 4 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள காலத்துக்குள் பணிகளை முடிக்கும்படி அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டும். அம்ருத் திட்டத்தில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும், நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு தேவையான 135 லிட்டர் குடிநீரை வழங்குவதற்கு விரைந்து வழிவகை செய்ய வேண்டும்.

இதுபோன்று ஆலோசனை கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட்டு ஒவ்வொரு பணியின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும். எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்களுடைய பணிகளை கூர்ந்து கண்காணித்து நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை

முன்னதாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற அபிவிருத்தி திட்டம், 15-வது நிதிக்குழு மானிய திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் தார், சிமெண்டு சாலைகள் மற்றும் கான்கிரீட் பேவர் பிளாக் அமைக்கும் பணிகள் குறித்தும்,

குப்பைகளை தூய்மை பணியாளர்களின் மூலம் சேகரித்தல், அவற்றை இயற்கை உரங்களாக மறுசுழற்சி செய்தல், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், குடிநீர் பணிகள், பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், தெருவிளக்குகளை பராமரித்தல், புதிய தெருவிளக்குகளை அமைத்தல் போன்ற பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் துணைமேயர் சுனில்குமார், மண்டலக்குழு தலைவர்கள் புஷ்பலதா வன்னியராஜா, நரேந்திரன், யூசுப்கான், உதவி கமிஷனர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story