வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலங்களில் 1.1.2023 உடன் தொடங்கும் காலாண்டிற்கு அந்தந்த மாவட்டங்களில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து வேலை வாய்ப்பற்ற உதவி தொகை, திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து 31.12.2022 அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.
ஆண்டு வருமானம்
மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்பு வரையிலான தகுதிக்கு மாதம் ரூ.600 வீதமும், பிளஸ்-2 தகுதிக்கு மாதம் ரூ.750 வீதமும் மற்றும் பட்ட படிப்புக்கு மாதம் ரூ.1,000 வீதம் வழங்கப்படும். இதர மனுதாரர்களை பொறுத்தவரையில் பள்ளிஇறுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200 வீதமும், பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ரூ.300 வீதமும், பிளஸ்-2 தகுதிக்கு மாதம் ரூ.400 வீதமும் மற்றும் பட்ட படிப்புக்கு மாதம் ரூ.600 வீதம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. ஏனையோருக்கு மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவி தொகையினை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.3.2023 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும் இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை.
தொலைதூர கல்வி பயிலலாம்
விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலுபவராக இருத்தல் கூடாது. ஆனால், தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். உதவி தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலை வாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in/downloads/uaApplication.pdf-என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே, விண்ணப்பித்து 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.
28-ந்தேதிக்குள்...
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இயங்கும் வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகை திட்டப் பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடனும், மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரையில் மேற்படி சான்றுகளுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடனும் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம். மேலும் உதவித்தொகை பெற்று வரும் பயன்தாரர்கள் விதிமுறைகளுக்குட்பட்டு ஆண்டுதோறும் அளிக்க வேண்டிய சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க பிப்ரவரி 28-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.