மின்சார வாரியத்தில் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியில் உள்ள பெண்கள் சேலை, சல்வார், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து கொள்ளலாம். பணியில் உள்ள ஆண்கள் பார்மல் என்று அழைக்கப்படும் நாகரிக உடைகளான பேண்ட், வேட்டி மற்றும் தமிழக, இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் எந்த உடையையும் அணியலாம். கேசுவல் என்று அழைக்கப்படும் அலங்கார உடைகளை அணியக்கூடாது.
நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டியிருந்தால், முழுக்கையுடன் கூடிய சிறியளவில் பட்டன் வைத்த கோட் அணிய வேண்டும்.
கோட் - டை அணிய வேண்டும்
பட்டன் இல்லாத கோட் அணிய ஊழியர் விரும்பினால் கண்டிப்பாக 'டை' அணிய வேண்டும். அந்த உடையின் நிறமும், வடிவமைப்பும் சாந்தமான வகையில் இருக்க வேண்டும்.
பெண்களைப் பொறுத்தவரை சாந்தமான நிறத்தில் துப்பட்டாவுடன் சுடிதார், சேலை, சல்வார் போன்றவற்றை அணியலாம். அலுவலகத்தின் கண்ணியம், ஒழுக்கம் போன்றவற்றை பேணும் வகையில் அனைத்து ஊழியர்களும் இந்த உத்தரவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட உத்தரவை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயலாளர் ஏ.மணிகண்ணன் பிறப்பித்து உள்ளார்.