தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள்
தர்மபுரி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.
தர்மபுரி நகராட்சியின் பொது சுகாதார பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, தையல் கூலி ரூ.500, காலணிகள், அடையாள அட்டை, முக கவசங்கள் மற்றும் கையுறைகள் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரி நகராட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் முன்னிலை வகித்தார். ஒப்பந்ததாரர் ஜப்பார் வரவேற்றார். நிகழ்ச்சியில் தூய்மை பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்கள் 90 பேருக்கு சீருடைகள் உள்ளிட்ட பொருட்களை தலைவர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் வழங்கினர். தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிக்கு செல்லும் போது முறையாக சீருடையுடன், அடையாள அட்டை, கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் அணிந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், ரமணாசரண், சீனிவாசலு உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.