முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் - மின்சார வாரியம் உத்தரவு
முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மத்திய உள்துறை மந்திரி கடந்த 10ம் தேதி சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கடந்த 10ம் தேதி இரவு விமானம் மூலம் சென்னை வந்தார்.
அமித்ஷா சென்னை வந்த போது சென்னை விமானம் நிலையத்திற்கு வெளியே மின் தடை ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு வெளியே ஜிஎஸ்டி சாலையில் மின் தடை ஏற்பட்டது. அமித்ஷா வருகையின் போது மின் தடை ஏற்பட்டதை கண்டித்து பாஜகவின் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேவேளை, போரூர் துணை மின்நிலைய உயர்மின் அழுத்த பாதையில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மின் துண்டிப்பு ஏற்பட்டதன் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இரவு 9.34 முதல் 10.12 மணிவரை மட்டுமே மின் தடை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாற்று வழியில் மின்வினியோகம் செய்யப்பட்டது என்று மின்வாரியத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், முக்கிய பிரமுகர்கள் வருகையின் போதும், பிரதான அரசு நிகழ்ச்சிகள் நடைபெறும்போதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை துறைசார்ந்த அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு மின்வாரிய நிர்வாக இயக்குனர் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.