திருச்செந்தூர் பகுதியில் தடையில்லா மின்சாரம்:ஒரே நாளில் 321 புதிய மின்கம்பங்கள் நடவு
திருச்செந்தூர் பகுதியில் தடையில்லா மின்சாரம்: ஒரே நாளில் 321 புதிய மின்கம்பங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் பகுதியில் மழைக்காலத்தில் தடையில்லாத மின்சாரம் வழங்க, ஒரே நாளில் 321 புதிய மின்கம்பங்கள் நடப்பட்டன.
இதுகுறித்து திருச்செந்தூர் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்கம்பம் மேளா
வருகிற மழைக்காலத்தில் மின்நுகர்வோர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையிலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளக்கூடிய அனைத்து பராமரிப்பு பணிகளையும் நிறைவு செய்ய மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் வாரியத் தலைவர் அறிவுறுத்தி உள்ளார். இதை தொடர்ந்து நெல்லை மண்டல தலைமை பொறியாளர் மற்றும் தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் வழிகாட்டுதலின்படி உயர் மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றுதல் மற்றும் அதிக இடைவெளி உள்ள மின் கம்பங்களுக்கு இடையே ஊடு மின்கம்பம் அமைக்கும் மின் கம்பம் மேளா நடந்தது.
321 மின்கம்பங்கள்
இதனை தொடர்ந்து திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட பிரிவு அலுவலகங்களில் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பழுதான மின்கம்பங்கள் மாற்றுதல் மற்றும் ஊடு மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடந்தன. அதன்படி திருச்செந்தூரில் 23 மின்கம்பங்களும், காயாமொழி 14, பரமன்குறிச்சி 23, ஆறுமுகநேரி 24, காயல்பட்டினம் 23, குரும்பூர் 21, நாசரேத் 11, ஆழ்வார்திருநகரி 15, மெஞ்ஞானபுரம் 18, சாத்தான்குளம் நகர் 23, சாத்தான்குளம் ஊரகம் 11, பழனியப்பபுரம் 15, உடன்குடி நகர் 25, உடன்குடி ஊரகம் 25, படுக்கப்பத்து 25, நடுவக்குறிச்சி 25 மின்கம்பங்கள் நடப்பட்டு உள்ளன. ஒரே நாளில் மொத்தம் 321 மின்கம்பங்கள் நடப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.