பக்கிங்காம் கால்வாயை தூர்வார வேண்டும்- ஒன்றியக்குழு


பக்கிங்காம் கால்வாயை தூர்வார வேண்டும்- ஒன்றியக்குழு
x
தினத்தந்தி 4 Dec 2022 12:30 AM IST (Updated: 4 Dec 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருமுல்லைவாசல் முதல் பழையாறு வரை பக்கிங்காம் கால்வாயை தூர்வார வேண்டும் என கொள்ளிடம் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை

திருமுல்லைவாசல் முதல் பழையாறு வரை பக்கிங்காம் கால்வாயை தூர்வார வேண்டும் என கொள்ளிடம் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றியக்குழு கூட்டம்

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அவை கூடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானுசேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்அருள்மொழி முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் கவிதா வரவேற்றார். கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

அங்குதன் (தி.மு.க.):- வேட்டங்குடி ஊராட்சியைச் சேர்ந்த முத்தரையர் தெருவில் உள்ள 60 குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். திருமுல்லைவாசல் முதல் பழையார் வரை பக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக தூர்வார வேண்டும். இந்த கால்வாய் தூர்வாரி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் மழை காலங்கள் மீனவர் கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுகிறது.

டாக்டர்கள் நியமிக்க வேண்டும்

சிவபாலன் (பா.ம.க.):- மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

லெட்சுமி பாலமுருகன் (தி.மு.க.):- தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி சாலைகளையும் மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நல்லூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர்களை பணியில் அமர்த்த வேண்டும்.

ரூ.30 ஆயிரம் நிவாரணம்

தலைவர் பானுசேகர் (பொறுப்பு):- கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை நிவாரணம் அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி, கலியபெருமாள், ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பூர்ணச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய மேலாளர் சம்மந்தம் நன்றி கூறினார்.


Next Story