"மின்சார சட்ட மசோதாவில் இலவச மின்சாரத்தை நிறுத்துங்கள் என இதுவரை சொல்லவில்லை" : மத்திய மந்திரி எல்.முருகன்
“மின்சார சட்ட மசோதாவில் இலவச மின்சாரத்தை நிறுத்துங்கள் என இதுவரை சொல்லவில்லை” என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
"மின்சார சட்ட மசோதாவில் இலவச மின்சாரத்தை நிறுத்துங்கள் என இதுவரை சொல்லவில்லை" என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
மத்திய மந்திரி முருகன்
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசிய கொடியை நாளை (அதாவது இன்று) முதல் 15-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகையால் அனைவரும் வீடுகளில் தேசிய கொடியேற்ற வேண்டும்.
மின்சார சட்டம்
போதைப்பொருளை ஒழிப்பது மிகவும் முக்கியமானது. தமிழகத்தில் அதிகளவில் போதைப்பொருள் புழக்கத்தில் இருப்பது கவலை கொள்ளும் விதமாக இருக்கிறது. தமிழக அரசு முக்கியமான, தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மின்சார சட்ட மசோதாவில் நாட்டில் பல சீர்திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. மின்சார சீர்திருத்த சட்டம் எந்தவித இலவச மின்சாரத்தையும் நிறுத்துங்கள் என்று இதுவரை சொல்லவில்லை. முழு சட்டம் வந்த பின்பு தான் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எட்டயபுரம்
இதையடுத்து எட்டயபுரம் வந்த மத்திய மந்திரி எல்.முருகனுக்கு பா.ஜ.க.வினர் வரவேற்பு அளித்தனர். சுதந்திர தினவிழாவையொட்டி எட்டயபுரத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மகாகவி பாரதியார் இல்லத்தில் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பாரதியார் இல்லம் முன்பு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
அதன்பிறகு மெயின் பஜார் வழியாக ஊர்வலமாக வந்து பாரதி மணிமண்டபத்தில் உள்ள பாரதியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வரவேற்பு
பாரதியார் மண்டபத்திற்கு வந்த மத்திய மந்திரி முருகனுக்கு பாரதியார் வேடமணிந்த குழந்தைகள் வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேசன், பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் மற்றும் பா.ஜ.கவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.