காவிரியின் வரலாறு தெரியாமல் மத்திய மந்திரி பேசுவது வேடிக்கை -துரைமுருகன் அறிக்கை


காவிரியின் வரலாறு தெரியாமல் மத்திய மந்திரி பேசுவது வேடிக்கை -துரைமுருகன் அறிக்கை
x

காவிரியின் வரலாறு தெரியாமல் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னை,

கடந்த 2 மாத காலமாக கர்நாடகம் தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவித்த அளவுப்படி காவிரியில் இருந்து தண்ணீரை வழங்கவில்லை. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கும், மத்திய நீர்வளத்துறை மந்திரிக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். மத்திய நீர்வளத்துறை மந்திரியை நான் 2 முறை நேரில் சந்தித்து நிலைமைகளை விளக்கி இருக்கிறேன்.

காவிரியிலிருந்து தண்ணீரை திறந்து விடு என்று கூறுகிற அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தான் உண்டு. அந்த வாரியம் கூட்டிய கூட்டங்களில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்து கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்தை அறிவுறுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய மந்திரி பேச்சு

காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசின் கீழ் இயங்குகிறது. எனவேதான் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட கர்நாடகத்தை அறிவுறுத்துமாறு வாரியத்திடம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த பணியை வாரியம் செய்ய வேண்டும் என்றுதான் முதல்-அமைச்சரும், பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்திற்கு பிரதமர் அலுவலகமோ அல்லது மத்திய நீர்வளத்துறை மந்திரியோ பதில் அளிக்காத நிலையில், மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர், "கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி, இரண்டும் ஓர் அணியில் இருக்கிறார்கள் ஏன் பிரச்சினையை நேரில் பேசித் தீர்த்துக் கொள்ளக்கூடாது" என்று தெரிவித்திருக்கிறார்.

மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகருக்கு, காவிரி பிரச்சினையின் முழு விவரம் தெரியவில்லை என்று நினைக்கிறேன். 1967-ம் ஆண்டிலிருந்து 1990-ம் ஆண்டு வரை இப்பிரச்சினை குறித்து பேசி பேசி எந்த முடிவிற்கும் வர முடியாத நிலையில்தான் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி, அந்த தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டுக்கு போய், சில திருத்தங்களோடு தீர்ப்பு வழங்கிவிட்ட பிறகு இரு மாநிலங்களிடையே பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை.

பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்திருந்தால் நடுவர் மன்றம் அமைத்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. இவையெல்லாம் நீண்ட காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற வரலாறு.

பாவம், பன்னீர்செல்வம்

'தாயும், பிள்ளையும் என்றாலும் வாயும், வயிறும் வேறு வேறு' என்று கிராமங்களில் கூறுவது போல, தோழமையாக இருந்தாலும் தோழமையாக இல்லாவிட்டாலும் அவரவர் உரிமையை நிலைநாட்டுவதில் அவரவர்கள் உறுதியாக இருப்பார்கள். அந்த நிலைப்பாடு தான் தமிழகத்தின் நிலைப்பாடு. இந்த விவரமெல்லாம் தெரியாமல் மத்திய இணை மந்திரி, முதல்-அமைச்சருக்கு அறிவுரை சொல்வது போல் ஓர் அறிக்கை விட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இதில் இன்னொரு வேடிக்கை. வேடிக்கையானது மட்டுமல்ல வேதனையானது என்னவென்றால், தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சராகவும், முன்னாள் முதல்-அமைச்சராகவும் இருந்தவருமான ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக மாநில முதல்-மந்திரியுடன், அந்த மாநில நீர்வளத்துறை மந்திரியுடனும் பேசி தண்ணீரை பெற வேண்டும் என்று தெரிவித்திருப்பதுதான்.

இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற நிலையில்தான் நடுவர் மன்றம் போனோம், தீர்ப்பு பெற்றிருக்கிறோம். இந்த தீர்ப்பில் ஏதாவது பிரச்சினை என்றால் சுப்ரீம் கோர்ட்டைதான் நாடே வேண்டுமே தவிர, மீண்டும் கர்நாடக மாநிலத்தோடு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறுவது காவிரி பிரச்சினையின் அடிப்படை வரலாறே தெரியாததனம் தான். பாவம், அரசியல் பிரச்சினையில் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறார் என்பதைத்தான் அவர் அறிக்கை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story