ரூ.3½ கோடியில் புதிய யூனியன் அலுவலக கட்டிட பணி
சிங்கம்புணரியில் ரூ.3½ கோடியில் புதிய யூனியன் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் ரூ.3½ கோடியில் புதிய யூனியன் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
பூமி பூஜை
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்கான புதிய அலுவலக கட்டிட கட்டுமான பணிக்கான பூமி பூஜை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. யூனியன் தலைவர் திவ்யாபிரபு முன்னிலை வகித்தார்.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் பொருளாதார நெருக்கடியை சீர்செய்து அனைத்து துறைகளின் சார்பில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாட்டின் வளர்ச்சி என்பது கிராமப்புறங்களின் வளர்ச்சியை பொறுத்தே அமைகிறது என்ற அடிப்படையில் தமிழக முதல்-அமைச்சர் கிராமப்புற மேம்பாட்டிற்கு தனித்துவம் வழங்கி அதற்கேற்ப அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். அதன்படி சிங்கம்புணரியில் ரூ.3 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய யூனியன் அலுவலகம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடைபெற்று உள்ளது.
ஊராட்சி செயலகம்
இதேபோல் தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட புதிய யூனியன் அலுவலகங்கள் கட்டுவதற்கு தமிழக முதல்-அமைச்சர் ரூ.280 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி செயலகம் அமைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த ஊராட்சி செயலகத்தில் கிராம நிர்வாக அலுவலகம், இணைய தள சேவை, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அறை, கூட்டரங்கம் மற்றும் அலுவலர்கள் பிரிவிற்கான தனி அறை ஆகியவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், நகர தி.மு.க. அவை தலைவர் சிவக்குமார், யூனியன் துணைத்தலைவர் சரண்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மதிவாணன், சிங்கம்புணரி தாசில்தார் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், லெட்சுமணராஜ் ஊராட்சி குழு உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, உதயசூரியன், கலைச்செல்வி அன்புச்செல்வன், ரம்யா செல்வகுமார், பெரியகருப்பி முத்தன், உமா சோணமுத்து, இளங்குமார், சதீஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.