அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை தொழிற்சங்கத்தினர் முற்றுகை
முற்றுகை
தீரன் தொழிற்சங்க பேரவையினர், ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மாநில செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஓட்டுனர், நடத்துனர்களின் கட்டாய பணியிட மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும். பணிகளை முறையாக ஒதுக்கிட வேண்டும். ஈரோடு போக்குவரத்து மண்டல பொதுமேலாளரின் தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதைத்தொடர்ந்து போக்குவரத்து கழக பொதுமேலாளர், போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை ஏற்பதாக மண்டல பொதுமேலாளர் உறுதியளித்தார். அதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் தொழிற்சங்கத்தினா் மற்றும் கொ.ம.தே.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.