பல்கலைக்கழக அளவிலான கட்டுடல் போட்டி
கடலூர் அரசு கல்லூரியில் பல்கலைக்கழக அளவிலான கட்டுடல் போட்டி நடைபெற்றது.
கடலூர்:
அண்ணாமலை பல்கலைக்கழக மண்டலங்களுக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே ஆண்களுக்கான "சிறந்த கட்டுடல் போட்டி" கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். பெரியார் கலைக்கல்லூரியின் பொருளியல் துறைத்தலைவர் பேராசிரியை ராமகிருஷ்ணன்சாந்தி, திண்டிவனம் கோவிந்தசாமி கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 15 கல்லூரிகளில் இருந்து வந்திருந்த 35 வீரர்கள் 60, 65, 70, 75, 80, 85 கிலோ எடைப் பிரிவுகளில் பங்கு பெற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் பல்கலைக்கழக ஆணழகன் பட்டத்தை புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் ரமேஷ் கண்ணா வென்றார். இதில் உடற்கல்வி இயக்குனர் ராஜமாணிக்கம் மற்றும் அந்தந்த கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள், பாடி பில்டிங் அமைப்பு பிரதிநிதிகள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பெரியார் கலைக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் குமணன் செய்திருந்தார்.
இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீரர்கள், மங்களூரில் நடைபெறவிருக்கும் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான போட்டியில் பங்கு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.