தமிழக வீட்டு வசதி வாரியத்தில் விற்பனையாகாத8 ஆயிரம் காலி மனைகள்- வீடுகளை விற்க நடவடிக்கைஅமைச்சர் சு.முத்துசாமி பேட்டி


தமிழக வீட்டு வசதி வாரியத்தில் விற்பனையாகாத8 ஆயிரம் காலி மனைகள்- வீடுகளை விற்க நடவடிக்கைஅமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
x

தமிழக வீட்டு வசதி வாரியத்தில் விற்பனையாகாத 8 ஆயிரம் காலி மனைகள் மற்றும் வீடுகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு

தமிழக வீட்டு வசதி வாரியத்தில் விற்பனையாகாத 8 ஆயிரம் காலி மனைகள் மற்றும் வீடுகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

சிறப்பு முகாம்

ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

சாயக்கழிவு பிரச்சினை என்பது பவானிசாகரில் மட்டும் அல்ல, ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ளது. சாயக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு காண பவானிசாகர் மட்டும் அல்லாமல் காலிங்கராயன் வாய்க்கால், காவிரி ஆறு, நிலத்தடி நீராதாரங்களை பாதுகாக்க பல புதிய திட்டங்கள், அமைக்கப்பட்டு அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வனவிலங்கு சரணாலாயம் அமைப்பதினால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

வீட்டு வசதி வாரியத்தில் விற்பனை பத்திரம் வழங்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் 13 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில், வீடு வாங்கியவர்கள், மனையாக வாங்கியவர்கள், வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்ட நிலங்கள், எடுப்பதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்ட இடங்கள், ஆக்கிரமிப்பு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வருகிற ஜூன் மாதம் 3-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கோரிக்கை மனு பெட்டி சென்னை வீட்டு வசதி வாரியம் தலைமை அலுவலகம் உள்பட 16 மாவட்ட வீட்டு வசதி வாரிய அலுவலகங்களில் வைக்கப்பட உள்ளன. மேலும் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு கோர்ட்டு நடவடிக்கையில்லாத பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.

தனியார் பள்ளிக்கு 'சீல்'

தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தில் விற்பனையாகாத 8 ஆயிரம் காலி மனைகள், வீடுகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கோவில் ஒன்று, வீட்டு வசதி வாரிய நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தினர் அரசிடம் பேச உள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் பேசிய பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரோட்டில் வாடகை செலுத்தாத தனியார் பள்ளிக்கூடத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சீல் வைக்கப்பட்டது. பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ- மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அவர்கள் நிலுவை தொகையை முழுமையாக வழங்கினால், வீட்டு வசதி வாரியம் மீண்டும் வாடகைக்கு வழங்க தயாராக உள்ளது.

அரசியல் ரீதியான நடவடிக்கை

வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது என்பது, அரசியல் ரீதியான நடவடிக்கை ஆகும். ஏனென்றால், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒரு வாரத்திற்கு பிறகு பாருங்கள் என கூறியிருந்தார்.

இதில் இருந்து இங்கு அரசாங்கம் நடக்கிறதா? அல்லது ஒரு கட்சியின் நிர்வாகி சொல்வது நடக்கிறதா? என சந்தேகம் எழுகிறது. இந்த சோதனையில் ஒரு தவறையும் கண்டறிய முடியாது.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.


Next Story