அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் சிகிச்சை இன்றி அவதிப்படும் நோயாளிகள்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அரியலூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் சிகிச்சை இன்றி நோயாளிகள் அவதிப்படுகின்றனர் என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.
குறைதீர் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், `குறை தீர்க்கும்நாள் கூட்டம்' மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 275 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டரால் பெறப்பட்டு, அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
உயிரிழப்பு ஏற்படும் அபாயம்
இதில் அரியலூர் நகர பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள் அளித்த மனுவில், அரியலூர் நகராட்சி தேரடி தெருவில் மங்கையர் பிள்ளையார் கோவில் முதல் தேரடி வரையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் அப்பகுதியில் உள்ள கடைகளுக்குள் புகுந்தது. மேலும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாயை தூர்வாரி கழிவுகள், மண் மற்றும் குப்பைகள் அனைத்தும் சாலையோரத்தில் போடப்பட்டது.
தொடர்ந்து இதனை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தாததால் தினசரி போக்குவரத்து நெரிசலும், வாகன விபத்தும் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீேழ விழுவதால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள் அவதி
அரியலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சுகுமார் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரவு நேரத்தில் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. மேலும் போதிய மருந்து, மாத்திரைகள் இருப்பு இல்லை என நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் மருத்துவக்கல்லூரி மாணவிகள் விடுதியில் வாட்டர் ஹீட்டர் அமைக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.