மயிலாடுதுறை சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்வு
மயிலாடுதுறை சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்வு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினர்
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரின் நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது, மயிலாடுதுறை நகராட்சியை வருவாய் வரவு, மக்கள்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் தேர்வுநிலை நகராட்சியான மயிலாடுதுறையை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதற்கான கருத்துருவினை முன்மொழிவு தயார் செய்யப்பட்டு அதற்கான சிறப்பு நகரசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகரசபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் மயிலாடுதுறையை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் அரசு கூடுதல் முதன்மை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, சிறப்பு நிலை நகராட்சி அறிவிப்பை கொண்டாடும் வகையில் நகராட்சி தலைவர் தலைமையில் நகரசபை உறுப்பினர்கள் மயிலாடுதுறை பஸ் நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.