நிரம்பி வரும் மேல் காவனூர் ஏரி
கே.வி.குப்பம் அருகே உள்ள மேல்காவனூர் ஏரி நிரம்பி வருகிறது. இதனால் ண்ணீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிரம்பி வருகிறது
கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூர் ஏரி வேலூர் மாவட்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய ஏரி. இது சுமார் 484 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த ஏரி பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 3 ஆண்டுகளாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டி வருகிறது. இந்த ஆண்டும் மாண்டஸ் புயல், மழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி கோடி போகின்றன. அருகில் உள்ள பசுமாத்தூர் ஏரி நிரம்பி வழிந்தால் அந்த நீர் இந்த ஏரியை அடையும்.
ஏரி கோடிப் போகும்போது தண்ணீர் வெளியேறும் வழியில் உள்ள கால்வாய்களை பலர் ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளனர். தொடரும் இந்த ஆக்கிரமிப்பால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் விவசாய நிலங்களின் வழியே செல்கிறது. ஏரியிலிருந்து மதகு வழியாக விவசாய பாசனத்துக்கு செல்லும் காவாய்களும் இதேபோல ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
இதனால், கடந்த ஆண்டு கோடி போனபோது அந்த வெள்ளநீரால் சுமார் 1,500 ஏக்கர் பயிர்கள் மூழ்குவதை தடுக்கவேண்டும் என்று வேலூர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். மேலும், கரையோரம் ஊற்றெடுக்கும் தண்ணீர் கூட இந்த கால்வாயில் வர வழியில்லாமல் திசைமாறிப் போனதால் ஏரிக் கரையை ஒட்டி உள்ள பலரது நிலங்கள் சதுப்பு நிலமாக மாறிவிட்டது. இங்கு கோரைப்புல் வளர்ந்தும், 500-க்கும் மேற்பட தென்னை மரங்கள் வேர் அழுகி காய்ந்தும் மொட்டையாகிவிட்டன என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே, ஏரி கோடி போகும் தண்ணீர் விவசாய நிலத்தின் வழியே செல்லாமல் கால்வாயில் செல்ல, வழிவகை செய்யவேண்டும். சுமார் 20 அடி அகலம் இருந்த கால்வாய் விவசாய நிலங்களாகவும், கட்டிடங்களாகவும் ஆக்கிரமிப்பாளர்களால் மாறிவிட்டது. தண்ணீர் செல்லும் பாசனக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாய பயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.