படுகர் இன மக்கள் கொண்டாடிய 'உப்பு ஹட்டுவ' பண்டிகை


படுகர் இன மக்கள் கொண்டாடிய உப்பு ஹட்டுவ பண்டிகை
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் படுகர் இன மக்கள் ‘உப்பு ஹட்டுவ' பண்டிகையை கொண்டாடினர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி பகுதியில் படுகர் இன மக்கள் 'உப்பு ஹட்டுவ' பண்டிகையை கொண்டாடினர்.

பண்டிகை

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் அட்டி என்று அழைக்கப்படும் கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ஆண்டுதோறும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உப்புஹட்டுவ என்ற பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உப்பு ஹட்டுவ பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை அவரவர் வீட்டில் இருந்து ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து உப்பு, பச்சை கடலை, புல் வகைகள் என கொண்டு வந்து ஆற்றில் கரைத்தனர்.

அதிலிருந்த தண்ணீரை மாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட கல்லில் ஊற்றி, மாடுகளுக்கு தண்ணீரை வழங்கி வழிபட்டனர். பின்னர் வீடுகளில் தயாரிக்கப்பட்ட பணியாரங்கள், கோதுமை தோசைகளை (பொத்திட்டு) கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கினர். பின்னர் மாடுகளை தங்களது கிராமத்திற்கு அருகே உள்ள எம்மட்டி (மாடுகள் மேய்க்கப்படும் இடம்) என்ற இடத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு தொழுவங்களில் அடைத்து, மாடுகளை மேய்ச்சலில் ஈடுபடுத்துவார்கள்.

மாடுகளுக்கு உப்பு தண்ணீர்

தொடர்ந்து ஜூன் மாதம் மழை பெய்து, பசுமை திரும்பிய பிறகு மாடுகளை தங்களது கிராமங்களுக்கு அழைத்து வருவார்கள். இந்த பாரம்பரிய வழக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு, பின்பு காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட இலை, நெறி செடிகளை, வீட்டிற்கு கொண்டு சென்று, அதை வீட்டின் முற்றத்தில் தொங்கவிடுவர். இதன் காரணமாக தங்களுக்கு நோய், நொடிகள் வராமல் இருக்க அந்த செடிகள் உதவும் என்பது ஐதீகம்.

மேலும் மாடுகள் உப்பு தண்ணீர் குடிப்பதால், காலையில் இருந்து இரவு வரை மேய்ச்சலுக்கு எங்கு சென்றாலும் வீட்டுக்கு திரும்பி வரும் என்ற நம்பிக்கையில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டது. மேலும் வீட்டில் பாயாசம் தயாரித்து தங்கள் ஊரில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் படுகர் இன மக்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை மூலம் வறட்சி நீங்கி, மழை பொழிந்து, ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிவித்தனர்.


Next Story