யு.பி.எஸ்.சி. தேர்வை 498 பேர் எழுதினர்
வேலூர் மாவட்டத்தில் 4 மையங்களில் நடந்த யு.பி.எஸ்.சி. தேர்வை 498 பேர் எழுதினார்கள். தேர்வு மையங்களை யு.பி.எஸ்.சி. தேர்வு கண்காணிப்பு அலுவலர் சஞ்சீவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
யு.பி.எஸ்.சி. தேர்வு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் அமலாக்கத்துறை, வருங்கால வைப்புநிதி உதவி அலுவலர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான எழுத்துத்தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழகத்தில் சென்னை, வேலூர், கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1,114 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத வேலூர் டி.கே.எம். மகளிர் கலைக்கல்லூரி, ஊரீசு மேல்நிலைப்பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்று 4 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
498 பேர் தேர்வு எழுதினர்
தேர்வின் முதல்தாள் காலை 9.30 மணிக்கு தொடங்கி 11.30 மணிவரை நடந்தது. இதையொட்டி தேர்வர்கள் காலை 8 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
செல்போன், கால்குலேட்டர், மின்னணு கைக்கெடிகாரம் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. யு.பி.எஸ்.சி. தேர்வின் முதல்தாளை 498 பேர் எழுதினார்கள். 616 பேர் எழுதவில்லை.
பிற்பகல் 2 முதல் 4 மணி வரை நடந்த 2-ம் தாள் தேர்வு எழுத 1,068 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 449 தேர்வு எழுதினார்கள். 619 பேர் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களை யு.பி.எஸ்.சி. தேர்வு கண்காணிப்பு அலுவலர் சஞ்சீவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அனைத்து தேர்வு மையங்களிலும் செல்போன் ஜாமர்கருவி பொருத்தப்பட்டிருந்தது. முக்கிய பகுதிகளில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.