யூரியா, டி.ஏ.பி. உரங்கள் தட்டுப்பாடு
நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளில் யூரியா, டி.ஏ.பி. உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நன்னிலம்:
நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளில் யூரியா, டி.ஏ.பி. உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சம்பா சாகுபடி
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.தற்பாது நடவுப் பணிகள் தொடக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான விவசாயிகள் நேரடி விதைப்பு செய்துள்ளனர்.
நேரடி விதைப்பு செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கு மேலுரமும், நடவு செய்யப்பட்ட பயிர்களுக்கு அடி உரமும் இட வேண்டும்.
உரங்கள் தட்டுப்பாடு
இந்த நிலையில் நன்னிலம் பகுதிகளில் டி.ஏ.பி. மற்றும் யூரியா உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சம்பா நெற்பயிர்களுக்கு தேவையான டி.ஏ.பி, யூரியா உரங்கள் கிடக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் கடைகளிலும் டி.ஏ.பி., யூரியா உரங்கள் கிடைப்பதில்லை.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒரு சில தனியார் கடைகளில் யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்களை வைத்துக்கொண்டு சில கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்கின்றனர் டி.ஏ.பி. உரம் வேண்டும் என்றால் அதற்காக ரூ.500 மதிப்பிலான ஒரு மருந்தை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.
இதனால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.