பிளாஸ்டிக்கை தவிர்க்க மாற்றுப்பொருளை பயன்படுத்த வேண்டும்
பிளாஸ்டிக்கை தவிர்க்க மாற்றுப்பொருளை பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
ராணிப்பேட்டை எல்.எப்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கெங்காதர முதலியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் என் குப்பை என் குப்பை, என் பொறுப்பு, என் நகரம், என் பெருமை என்ற தலைப்பில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்திட மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். அப்போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும், இதனை உங்கள் வீடுகளில் தெரிவித்து நமது நகரம், பூமி தூய்மையுடனும், பாதுகாப்புடனும் இருப்பதற்கு அனைவரும் உறுதி ஏற்று செயல்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவ -மாணவிகளின் கண்காட்சிகளை கலெக்டர் பார்வையிட்டார். மேலும் மாணவ -மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் மாணவ- மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ஏசுராஜ், சுகாதார ஆய்வாளர்கள், பள்ளி முதல்வர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.