நடைபாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
தேனிலவு படகு இல்லத்தில் மூடப்பட்டு உள்ள நடைபாதையை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
தேனிலவு படகு இல்லத்தில் மூடப்பட்டு உள்ள நடைபாதையை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தேனிலவு படகு இல்லம்
நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா படகு இல்லம் செயல்பட்டு வருகின்றன. ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகள் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்பட்டு வருகிறது. இங்கு சீசன் காலங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதால், அவர்களது வசதிக்காக ஊட்டி ஏரியின் மறுகரையோரத்தில் கடந்த 2008-ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ.83 லட்சம் செலவில் தேனிலவு படகு இல்லம் அமைக்கப்பட்டது.
அங்கு பசுமை புல்வெளியுடன் கூடிய பூங்கா உள்ளது. சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் இருக்கிறது. மேலும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி, கழிப்பிட வசதி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேனிலவு படகு இல்லம் சீரமைக்கப்பட்டது.
நடைபாதை அடைப்பு
தேனிலவு படகு இல்லத்தில் மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்கின்றனர். மேலும் அவர்கள் நடந்து சென்ற படி ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசிக்கும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு ஓய்வெடுப்பதற்காக இருக்கைகளும் உள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ளது போல் நடைபாதை அமைக்கப்பட்டதால், நடைபாதையில் சென்று வர புதுமண தம்பதிகள் ஆர்வம் காட்டினர்.
ஆனால், தற்போது அந்த நடைபாதை அடைத்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
தேனிலவு படகு இல்லத்தில் ஏரியின் கரையோரத்தில் உள்ள நடைபாதையில் நடந்து இயற்கை அழகை கண்டு ரசித்து வந்தோம். தற்போது நடைபாதை பயன் இல்லாமலும், சுற்றுலா பயணிகளுக்கு தெரியாமலும் இருக்கிறது. மேலும் அலங்கார விளக்குகள் சேதமடைந்து உள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும்
எனவே, உடனடியாக நடைபாதையில் விளக்குகளை சீரமைத்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு நடைபாதையை திறந்து விட வேண்டும். வருகிற கோடை சீசனுக்குள் தேனிலவு படகு இல்லத்தை மேம்படுத்தி, சுற்றுலா பயணிகள் படகு சவாரி முடித்து நடைபாதை வழியாக நடந்து வர அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நடைபாதையில் காட்டெருமைகள் தொல்லை இருக்கிறது. அதனால் தற்காலிகமாக அடைக்கப்பட்டு உள்ளது. தற்போது சாகச சுற்றுலாவுக்கான பணிகள் தொடங்கி இருப்பதால், அதன் ஒரு பகுதியாக இந்த நடைபாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.