பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருள் பயன்பாடு: 383 கடைகளில் ரூ.16 லட்சம் அபராதம் வசூல்- உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தகவல்


பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருள் பயன்பாடு: 383 கடைகளில் ரூ.16 லட்சம் அபராதம் வசூல்- உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தகவல்
x

மதுரை மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு, புகையிலை பொருள் விற்பனை செய்த 383 கடைகளுக்கு ரூ.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கூறினார்.

மதுரை


மதுரை மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு, புகையிலை பொருள் விற்பனை செய்த 383 கடைகளுக்கு ரூ.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கூறினார்.

புகையிலை பொருட்கள்

மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம பாண்டியன் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, சுமார் 2 ஆயிரத்து 964 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள் போலீசார் உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.17 லட்சத்து 46 ஆயிரம் இருக்கும். இதுபோல், புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் முதல் முறை ரூ.5 ஆயிரம், 2-ம் முறை ரூ.10 ஆயிரம், 3-ம் முறை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை வளாகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் முதல் இதுவரை 274 கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.13 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 26 கடைகள் மூடப்பட்டுள்ளன. இது தவிர, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 9 மாதங்களில் இதுவரை 109 கடைகள் மூலம் ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

உணவு மாதிரிகள்

உணவு வணிகம் மற்றும் உணவு நிறுவனங்களில் சட்டப்பூர்வ உணவு மாதிரியானது எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் வரை, 861 மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சுத்தமாக உணவகங்களை பராமரித்ததற்காக, 138 உணவு வணிக நிறுவனங்களுக்கு மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையகம் சான்றிதழ் வழங்கி உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 81 சதவீத உணவு வணிகர்கள் பதிவு மற்று உரிமம் சான்று பெற்றிருக்கிறார்கள்.

மதுரை அழகர்கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ளிட்ட 25 கோவில்களுக்கு மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு மூலம் சுகாதாரமான பிரசாதம் என்ற சிறப்பு சான்று வழங்கப்பட்டுள்ளது. மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையகத்தால் வழங்கப்படும் மதிப்பீட்டு சான்றிதழை, மதுரையில் 32 உணவு நிறுவனங்கள், மத்திய சிறைச்சாலை, இந்தோ திபெத் பயிற்சி மையம் ஆகியவற்றிற்கு இ.ஆர்.சி. சான்று வழங்கப்பட்டுள்ளது.

364 வாட்ஸ்-அப் புகார்

உணவு மற்றும் உணவு தொடர்பான புகார்கள் தங்களது பகுதியில் இருப்பின் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் புகார் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் 364 வாட்ஸ்அப் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story