திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் ஷாம்பு, சோப்பு பயன்படுத்த தடை
திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் ஷாம்பு, சோப்பு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் ஷாம்பு, சோப்பு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சரவண பொய்கை
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கிழக்கு பகுதியில் மலையை சார்ந்து சரவண பொய்கை அமைந்து உள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சுமார் 15 அடி ஆழத்தில் அமைந்து உள்ள இந்த பொய்கையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் முடி காணிக்கை செலுத்துபவர்கள் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் சரவண பொய்கையின் நாலாபுறமும் படிக்கட்டினை பாசி படியாமல் சுத்தமாக வைத்து கொள்ளாதது, வெளிநபர்கள் இரவு நேரங்களில் மீன்பிடிப்பதை தடுக்காதது. திருஷ்டி கழிப்பை கண்டு கொள்ளாத நிலை தொடர்ந்தது. மேலும் மழைகாலங்களில் குடியிருப்பு பகுதியிலிருந்து கழிவுநீருடன் மழை தண்ணீர் பொய்கையில் கலப்பதை தடுக்காத நிலையும் தொடர்ந்தது.
இதை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள், வெளியூர் பக்தர்கள் பொய்கை மாசுபடுவதை தவிர்ப்பதோடு புனிதம் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.
சோப்பு பயன்படுத்த தடை
இதை தொடர்ந்து பொய்கையில் உள்ள ஆறுமுகநயினார் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்லுவதற்காக பிரதான வழியை திறந்து வைத்துள்ளனர். இதே சமயம் சரவண பொய்கையின் மேல்புறத்தில் உள்ள 3 நுழைவு வாயிலுக்கு கோவில் நிர்வாகம் பூட்டு போட்டது. மேலும் பொய்கைக்குள் சோப்பு, ஷாம்பு மற்றும் மாசுபடக்கூடிய ரசயான பொருட்களை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளது. இந்த நிலையில் பொய்கைக்குள் உள்ள மயில் மண்டபத்தின் மேல்புறத்தில் நேற்று முன்தினம் முதல்முறையாக அதிநவீன 3 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. பக்தர்கள் குளிப்பதை கேமரா பதிவு செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கேமரா கழற்றப்பட்டன. இதையடுத்து ஒலிபெருக்கி மூலம் பொய்கையில் ஷாம்பு, சோப்பு பயன்படுத்தினால் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். துணி துவைக்கக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.