இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும்மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாதிரி ஓட்டுப்பதிவுகலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு
இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் மாதிரி ஓட்டுப்பதிவை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஈரோடு தாலுகா அலுவலகம், ஈரோடு மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டு இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தோ்வு செய்யப்பட்டன.
இந்த எந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்தன. இதில் பெல் நிறுவன பொறியாளர்கள் 8 பேர் எந்திரங்களில் உள்ள பதிவுகளை நீக்கி, பழுது நீக்கம் செய்தனர்.
மாதிரி ஓட்டுப்பதிவு
இந்த நிலையில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி ஓட்டுப்பதிவு நேற்று காலை நடந்தது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மாதிரி ஓட்டுப்பதிவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் கூறியதாவது:-
வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டன. பெல் நிறுவன பொறியாளர்கள் எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டார்கள். இதில் 20 எந்திரங்களில் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மீதமுள்ள எந்திரங்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதில் ஒரு சதவீத எந்திரத்தில் 1,200 வாக்குகளும், 2 சதவீத எந்திரத்தில் 1,000 வாக்குகளும், மேலும் 2 சதவீத எந்திரத்தில் 500 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டன. அதன்படி சுழற்சி முறையில் 25 எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டது. இதுபோல் தேர்தலுக்கு முன்பு 2 முறை மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
இதேபோல் சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று ஆய்வு செய்தார்.