சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது-கலெக்டர் விஷ்ணு தகவல்
சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கப்படுகிறது என்று நெல்லை கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-
கிராம ஊராட்சிகளில் வெளிப்படை தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தினை வழங்கி அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து, நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டிடும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் சட்ட பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்து இருந்தார்.
அதன்படி கிராம ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையில் புதுமையான முயற்சிகள் எடுத்து மிக சிறப்பாக பணியாற்றியுள்ள கிராம ஊராட்சி தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடைய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் அனுப்பியுள்ள காரணிகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் வீதம் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
எனவே இந்த விருது பெற நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் இணையதளமான http://tnrd.tn.gov.in/-ல் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள பயணர் முகவரி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.