வடை வியாபாரி சாவு
திருச்செந்தூரில் வடை வியாபாரி இறந்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கீழவெயிலுகந்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 70). வடை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி மாரியம்மாள் (45). சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்பு மாரியம்மாள் சூடம் ஏற்றியதாக கூறப்படுகிறது. அப்போது அதே காம்பவுண்டில் வசித்து வரும் சங்கரின் மனைவி பேச்சியம்மாள், மாரியம்மாளிடம் பொது பாதையில் எப்படி சூடம் ஏற்றலாம் என வாக்குவாதம் செய்து தகராறு செய்துள்ளார். பேச்சியம்மாளுடன் சேர்ந்து சங்கரும் தகாத வார்த்தையால் மாரியம்மாளையும், அவரது கணவர் காளிதாசையும் பேசி காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த காளிதாஸ், மாரியம்மாள் ஆகிய இருவரும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு காளிதாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துராஜ் வழக்குப்பதிவு செய்தார். தாக்கப்பட்டதில் காளிதாஸ் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என இன்ஸ்பெக்டர் முரளிதரன் விசாரணை நடத்தி வருகிறார்.