சுகாதாரத்துறையில் காலிப்பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


சுகாதாரத்துறையில் காலிப்பணியிடங்கள்   2 மாதத்தில் நிரப்பப்படும்:   அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:15:22+05:30)

சுகாதாரத்துறையில் காலிப்பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தமிழகத்தில் சுகாதாரத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவரை தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காய்ச்சல் முகாம்கள்

தமிழகத்தில் கடந்த 21-ந்தேதி ஒரே நாளில் 1,000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் முதல் ஒரு பகுதியில் 3 பேருக்கு மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த பகுதியை கண்டறிந்து அங்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி 100-க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் கடந்த காலங்களில், இந்த காலகட்டத்தில் பருவநிலை மாற்றங்களின்போது வருகிற அளவு தான் காய்ச்சல் தற்போதும் உள்ளது. நேற்று முன்தினம் ஒட்டுமொத்த பாதிப்பு 442 ஆகும். இதில் 7 பேர் மட்டுமே அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மூன்று, நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வில் இருந்தாலே போதுமானது. தற்போது காய்ச்சல் கட்டுக்குள்தான் இருக்கிறது.

கொரோனா தடுப்பூசி

மேலும் மத்திய அரசின் அறிவுரைக்கு ஏற்ப செப்டம்பர் 30-ந் தேதி வரை கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. 4-ந் தேதி பள்ளிகளில் 12 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட விடுபட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. இதுவரை தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 96 சதவீதம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 91 சதவீதம் பேருக்கும், 12 முதல் 14 வயது வரை 90 சதவீதம் பேருக்கும், 15 முதல் 17 வயது வரை உள்ளவர்கள் 92 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தி உள்ளோம்.

தமிழகத்தில் சுகாதாரத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும். மாநிலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை. அப்படி பொதுமக்களுக்கு மருந்து தட்டுப்பாடு இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தால், 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மருந்து தட்டுப்பாடு இருப்பதாக பரவலாக வதந்தி கிளம்பி உள்ளதால் பொது எண்ணை அறிவித்து உள்ளோம். அதனை தொடர்பு கொண்டு தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-----------------


Next Story