நகராட்சி அலுவலகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
கூடலூர்
கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
நகராட்சி மன்ற கூட்டம்
கூடலூர் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், துணைத்தலைவர் சிவராஜ், பொறியாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் நகராட்சி மேலாளர் (பொறுப்பு) கிளாடிஸ், கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பண்ற தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்றது.
கூட்டத்தில் கவுன்சிலர் உஸ்மான்:- நகராட்சி அலுவலகத்தில் மேலாளர், வருவாய் ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாகவே உள்ளது. இதனால் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் பெறுவதில் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்தித்து பணியிடங்களை நிரப்ப கோரிக்கை விட வேண்டும். மேலும் லஞ்ச புகாரில் நகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டது, நகராட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது.
ஆணையாளர்:- காலி பணியிடங்களை நிரப்ப அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லஞ்ச புகாரில் சிக்கிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பரபரப்பு
கவுன்சிலர் வெண்ணிலா:- கோழிப்பாலம் குடிநீர் திட்டத்தில் உள்ள தண்ணீரை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முன் வருவதில்லை. அத்திட்டத்துக்காக இதுவரை ரூ.1 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடவையும் நிதி ஒதுக்குவதற்கு பதிலாக ஓவேலி பகுதியில் கூடுதலாக குடிநீர் திட்டங்கள் தொடங்கினால் செலவினங்கள் குறையும்.
ஆணையாளர்:- சிக்மாயார் பகுதியில் குடிநீர் திட்டம் தொடங்குவதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது.
கவுன்சிலர் வெண்ணிலா:- இத்திட்டம் தொடங்குவதற்கான ஆய்வு பணிக்காக உத்தேசமாக ரூ.10 லட்சம் ஒதுக்குவதாக தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆய்வுக்காக இவ்வளவு தொகை செலவாகிறதா?. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். மேலும் மன்ற ஒப்புதல் பெறாமலே தீர்மான புத்தகத்தில் வேறு பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆணையாளர்:- சம்பந்தப்பட்ட ஊழியர் மருத்துவ விடுப்பில் உள்ளார். அவர் பணிக்கு வந்தவுடன் விசாரிக்கப்படும். அப்போது கவுன்சிலர்கள் ஆவேசமாக பேசினர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.
குடிநீர் பிரச்சினை
கவுன்சிலர் ராஜேந்திரன்:- கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். முறையாக பதில் அளிக்காததால் மன்ற கூட்டத்தில் தொடர்ந்து பிரச்சனை ஏற்படுகிறது. கோடைக்காலமாகி விட்டதால் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் மும்தாஜ்:- கோத்தர் வயல் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அடுத்த கூட்டத்திற்குள் அதை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்.
இவ்வாறு கவுன்சிலர் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.