இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.
கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி முகாம்
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் கட்டிகானப்பள்ளி ஊராட்சி கீழ்புதூர் வட்டார வளமைய கல்வி விளையாட்டு வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-
கால்நடை வளர்ப்போர், செல்லப்பிராணிகள் வளர்ப்போர் மற்றும் பொதுமக்களுக்கு வெறிநோயை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்த தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மற்றும் ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா சார்பாக வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஆண்டு ஒன்றுக்கு 50 ஆயிரம் பேர் பலி கொள்கின்ற நோயாகும். வெறிநோய் விலங்குகள் வாயிலாக பரவுகின்றது.
உமிழ்நீரால் பாதிப்பு
ஆடு, மாடு போன்ற விலங்குகளுக்கு வெறிநோய் ஏற்பட்டால் மனிதர்களை பாதிப்பதில்லை. பாதிக்கப்பட்ட விலங்கினத்தின் உமிழ்நீரில் இந்நோய் கிருமி இருக்கும். காயம்பட்ட இடத்தில் இந்த உமிழ்நீர் படும்போது நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. கடிபட்ட இடத்தை நீர் விட்டு கழுவ வேண்டும். கடிபட்ட இடத்தில் கட்டு கட்டுதல் கூடாது. செல்லப்பிராணிகளுக்கு முதல் தடுப்பூசி 3 மாதத்திலும், பூஸ்டர் தடுப்பூசி 21 நாள் கழித்தும், அடுத்த தடுப்பூசி வருடம் ஒரு முறை செலுத்த வேண்டும்.
வெறிநோய் தடுப்பு, நாய் வளர்ப்போரின் பொறுப்புணர்வில் தான் ஆரம்பிக்கிறது. அனைத்து நாய்களுக்கும் வருடந்தோறும் வெறிநோய் தடுப்பூசி போட வேண்டும். பொதுமக்கள், தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு வெறிநோய் தடுப்பது பற்றிய விழிப்புணர்வு, ஆலோசனைகள் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், துணை இயக்குனர் மரியசுந்தர், உதவி இயக்குனர் அருள்ராஜ், தாசில்தார் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரிதேவி, பள்ளி கல்வி ஆய்வாளர் ஜெயராமன் மற்றும் கால்நடை துறை டாக்டர்கள், கால்நடை ஆய்வாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.