ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 5 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 6 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 4 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும்.
வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 45 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்தவரையில் பருவமழை காலங்களில் கோழிப்பண்ணையாளர்கள் தாங்கள் வாங்கும் தீவன மூலப்பொருட்களில் ஈரப்பதம் மற்றும் அப்ளா நச்சுகளை ஆய்வு செய்து கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் தீவன மூலப்பொருட்களை நல்ல காற்றோட்டம் உள்ள ஈரப்பதம் அண்டாத பகுதிகளில் சேமித்து வைக்க வேண்டும்.
துள்ளுமாரி நோய் தடுப்பூசி
தற்போதைய தட்பவெப்ப சூழ்நிலைகளில் கோழிகளை நச்சு உயிரி மற்றும் நுண்ணுயிரி நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள கால்நடை டாக்டர்களின் ஆலோசனைபடி தீவனங்களில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். பருவமழை காலங்களில் மழைநீர் கொட்டகையினுள் புகுவதால், கோழி எருவில் ஈக்களின் புழுக்கள் பெருகுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் உள்ள எருவை அவ்வப்போது அகற்ற வேண்டும். அவ்வாறு முடியாதபட்சத்தில் புழுக்களை கொல்லும் மருந்தை கோழி எருவின் மேல் தெளிக்க வேண்டும் அல்லது கோழித்தீவனங்களில் கலந்து விட வேண்டும்.
வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் துள்ளுமாரி நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், கால்நடை டாக்டரை அணுகி கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.