திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு
திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
திருப்புவனம்,
திருப்புவனம் புதூரில் உள்ள பூமாரி அம்மன், ரேணுகாதேவி அம்மன் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. போட்டியை பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த 14 காளைகளும், 154 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வடமாடு மஞ்சுவிரட்டுக்கு முன்பாக காளைகளுக்கு, கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் சரவணன் தலைமையில் டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு தலைமையிலான மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களுக்கு உடற்தகுதி பரிசோதனை செய்தனர். மஞ்சுவிரட்டில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை பிடித்த வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. மாங்குடி, தமிழக வீர விளையாட்டு குழு தலைவர் ராஜசேகரன், தாசில்தார் கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், தொழிலதிபர் திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் பழனிவேல்ராஜன் தலைமையில் விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். மஞ்சுவிரட்டில் 6-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதில் 2 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வடமாடு மஞ்சுவிரட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான மக்கள் பார்வையிட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மேற்பார்வையில் போலீசார் செய்திருந்தனர்.