வடமதுரை சவுந்தரராஜ பெருமாள்கோவில் தேரோட்டம்
‘கோவிந்தா’ கோஷம் முழங்க வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
ஆடித்தேரோட்டம்
வடமதுரையில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், ஆடி திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் பல்வேறு மண்டகப்படிதாரர்களின் கலை நிகழ்ச்சிகளோடு, ஒவ்வொரு நாளும் சிம்மம், கருடன், சேஷன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடந்த 30-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக வடமதுரை ஏழுமலையான் கோவிலில் இருந்து அழகர் கோவில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து கொடிமரம் முன்பாக சுதர்சன ஹோமம், சவனத் திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 5 மணி அளவில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக முத்தங்கி சேவையில் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதன்பின்னர் பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என்று கோஷம் முழங்கியவாறு பக்தி பரவசத்துடன் திருத்தேரை இழுத்தனர். தேரடி வீதியில் தேரோட்டம் நடந்தது. கொரோனா தொற்று மற்றும் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் காரணமாக 3 ஆண்டுகள் கழித்து நேற்று தேரோட்டம் நடந்ததால், ஏராளமான பக்தர்கள் ஆரவாரத்துடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர்.
பெருமாள் வீதி உலா
தேரோட்டத்தையொட்டி, நேற்று காலை முதல் மாலை வரை பெருமாள் கோவில் சொர்க்கவாசல் அருகே ஸ்ரீராகவேந்திரா அறக்கட்டளையின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இரவு 9 மணி அளவில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் பெருமாள் விசேஷ மின்அலங்கார வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் விஸ்வநாத், செயல் அலுவலர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் மேற்கொண்டனர்.
கலந்து கொண்டவர்கள்
இந்த விழாவில் வடமதுரை பேரூராட்சி தலைவர் நிருபாராணி கணேசன், செயல் அலுவலர் கல்பனாதேவி, தி.மு.க. நகர செயலாளர் கணேசன், வடமதுரை காங்கிரஸ் கிழக்கு வட்டார தலைவர் ராஜரத்தினம், ஓ.பி.எஸ். அணியின் வடமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன் வீரக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் வீரப்பன், ஸ்ரீபொன் ஆபரண தர்மசாஸ்தா அறக்கட்டளை நிர்வாகி காமராஜ், பா.ஜ.க. மேற்கு மண்டல துணை தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.