வைத்தியநாதசாமி கோவில் தேரோட்டம்
பங்குனி மாத உற்சவத்தை முன்னிட்டு வைத்தியநாதசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சீர்காழி:
பங்குனி மாத உற்சவத்தை முன்னிட்டு வைத்தியநாதசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
வைத்தியசாமி கோவில்
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் அருள்மிகு தையல்நாயகி உடனாகிய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நவக்கிரக ஸ்தலங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாக விளங்குகிறது.
இக்கோவில் வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், முருகப்பெருமான் செல்வமுத்துக்குமாரசாமியாகவும், தன்வந்திரி உள்ளிட்டோர் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
தேரோட்டம்
இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத உற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து நேற்று 7-ம் நாள் திருவிழாவான தேரோட்டம் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தையல்நாயகி உடனாகிய வைத்தியநாதசுவாமி, விநாயகர், செல்வ முத்துக்குமார சுவாமி, தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட நான்கு தேர்கள் அடுத்தடுத்து மேல கோபுர வாசலில் இருந்து புறப்பட்டு வீதியுலா சென்றது.
கட்டளை தம்பிரான் சுவாமிகள் தொடங்கி வைத்தார்
தேரோட்ட விழாவை வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சாமிநாதன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் அலெக்சாண்டர், வர்த்தக சங்க தலைவர்கள் கண்ணன், செந்தில்முருகன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 4 தேர்களையும் வடம் பிடித்து இழுத்து மீண்டும் தேரை நிலைக்கு கொண்டு வந்தனர்.
போக்குவரத்து மாற்றி அமைப்பு
தேர் திருவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக நான்கு வீதிகளிலும் தேர் திருவிழாவை முன்னிட்டு துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கு விழா முடிந்த கையோடு உடனுக்குடன் மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.