வறட்சியின் பிடியில் வைகை ஆறு


வறட்சியின் பிடியில் வைகை ஆறு
x

நிலக்கோட்டை அருகே வறட்சியின் பிடியில் வைகை ஆறு சிக்கியது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பகுதியில் உள்ள வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிணறுகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. அதனை சுத்திகரித்து நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் சின்னாளப்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ைவகை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. மேலும் தென்மேற்கு பருவமழை பெய்யாமல் இருப்பதால் வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லை. இதனால் அணைப்பட்டி பகுதியில் வைகை ஆறு வறண்டு விளையாட்டு மைதானம் போல் காட்சி அளிக்கிறது. வறட்சியின் பிடியில் வைகை ஆறு சிக்கி இருப்பதால் நிலக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்கள், சின்னாளப்பட்டி மற்றும் செம்பட்டி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து நிலக்கோட்டை பகுதி மக்களிடம் கேட்டபோது, போதிய மழை இல்லாததால் ஆறு வறண்டு கிடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற நிலை ஏற்பட்டது. தற்போது வைகை ஆற்றில் நீர்வரத்து இன்றி தொடர்ந்து நீடித்தால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றனர்.


Next Story