கோவில்களில் வைகாசி தேரோட்டம்


கோவில்களில் வைகாசி தேரோட்டம்
x

கோவில்களில் வைகாசி தேரோட்டம் நடந்தது.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

தேரோட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் உள்ள பாலாம்பிகை சமேத மற்றுரை வரதீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளிய மாற்றுரை வரதீஸ்வரருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தி கோஷங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் கோவில் நான்கு மாட வீதிகளில் வீதியுலா வந்து நிலையை அடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தெய்வேந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதேபோல் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள மும்மூர்த்திகள் தலமான உத்தமர்கோவிலில் அருள்பாலிக்கும் பிச்சாண்டேஸ்வரர் வைகாசி விசாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளிய பிச்சாண்டேஸ்வரர் தேரோடும் வீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் ஓம் சிவாயா... நமச்சிவாயா... என்று பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சிதம்பரம் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

ஆடும் பல்லக்கில் வீதி உலா

மண்ணச்சநல்லூர் பூமிநாதசாமி கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து வாணவேடிக்கைகள் ஒலிக்க, மேள தாளங்கள் முழங்க தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) நடராஜர் தரிசனம் மற்றும் தீர்த்த வாரியும், மாலையில் கொடி இறக்கமும் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) பிச்சாடனார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மாலையில் ஆடும் பல்லக்கில் சாமி வீதி உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் நிர்வாகம் மற்றும் திருவாவடுதுறை ஆதீன கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.

இன்று நடராஜர் தரிசனம்

தொட்டியத்தில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி உடனுறை அனலாண்டீஸ்வரர் கோவில் வைகாசி விசாக முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தேரில் எழுந்தருள பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து இன்று நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி, பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற உள்ளது. நாளை சாமி மற்றும் அம்பாள் முத்து பல்லக்கில் எழுந்தருளி திருவீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் ஜோ.ஆனந்தி, தக்காரும், செயல் அலுவலருமான சு.பிரபாகரன் மற்றும் மதுரைகாளியம்மன் செயல் அலுவலர் ப.விஜய் அருள், உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.


Next Story